100-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு- 300 போலீசார் குவிப்பு
வேட்டவலம் அருகே அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் வழிபாடு நடத்த உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆடித்திருவிழவையொட்டி 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த சாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் வழிபாடு நடத்த உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆடித்திருவிழவையொட்டி 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த சாமி தரிசனம் செய்தனர். அசமங்பாதவிதங்களை தவிரக்க டி.ஐ.ஜி, 4 மாவட்ட சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் குவிக்கப்பட்டனர்.
வழிபாடு நடத்த எதிர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு தரப்பினர் மட்டுமே தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மற்றொரு தரப்பினரும் தங்களுக்கு வழிபாட்டில் உரிமை கோரியும், ஆடி மாதத்தையொட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதிகோரி வந்தனர். இதற்கு ஏற்கனவே வழிபாடு நடத்தி வந்த தரப்பினர் மறுத்து வந்தனர்.
எனவே தங்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்க அனுமதிக்கக்கோரி சம்பந்தப்பட்ட தரப்பினர் கடந்த மாதம் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.
பேச்சுவார்த்தை
அதன்பேரில் இருதரப்பினரிடமும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆடி திருவிழா வழிபாடு நடத்த இதுவரை மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து காலை முதல் 100-க்கும் மேற்படடோர் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (வேலூர்), கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பர்ட் ஜான் (திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) தலைமையில் திருவண்ணாமலை கூடுதல் சூப்பிரண்டு ஸ்டீபன், துணை சூப்பிரண்டு குணசேகர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக பொங்கல் வைக்க வந்தனர்.
கண்காணிப்பு
மேலும் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சாப்ஜான், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபடட்டனர்.