மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி

எட்டயபுரம் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டவிபத்தில் வியாபாரி பரிதாபமாக பலியானார். அவரது 2 மகன்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-01-20 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டவிபத்தில் வியாபாரி பரிதாபமாக பலியானார். அவரது 2 மகன்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாபாரி

எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் முத்து மாரியப்பன் (வயது 42). வியாபாரி. இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது 2 மகன்களை டியூசன் படித்த இடத்திலிருந்து வீட்டுக்கு மொபட்டில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

சாவு

இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட முத்துமாரியப்பனும், அவரது 2 மகன்களும் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துமாரியப்பன் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் பரிதபமாக பலியானார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்த அவரது 2 மகன்களையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபரிடம் விசாரணை

தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பசுவந்தனை ராஜூ நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் ( 19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ. ஆறுதல்

மேலும் விபத்தில் பலியான முத்து மாரியப்பன் வீட்டுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகன்களின் உடல் நலம் குறித்து டாக்டரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்த அவர், உரிய மருத்துவ சிகிச்சையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்