ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் அரிசி கொம்பன் யானை நடமாட்டமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குள் அரிசி கொம்பன் யானை சுற்றித்திரிகிறதா என வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குள் அரிசி கொம்பன் யானை சுற்றித்திரிகிறதா என வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேகமலை புலிகள் காப்பகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மிகவும் அடர்த்தியான பள்ளத்தாக்குகளை கொண்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் யானை, மான், மிளா, காட்டு எருமை, புலி சிறுத்தைகள் என ஏராளமான வன விலங்குகள் இப்பகுதியில் உள்ளன. இந்தியாவிலேயே அரிதாக காணப்படும் சாம்பல் நிற அணில்கள் இங்கு அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா வனப்பகுதியில் பலரை கொன்ற அரிசி கொம்பன் என்ற காட்டு யானை வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பெரியார் மலைப்பகுதியில் கேரள எல்லைக்குள் விட்டனர்.
இந்நிலையில் ஆபத்தான அரிசி கொம்பன் யானை கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து மேகமலை பகுதிக்கு நுழைந்தது. தினந்தோறும் 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் ரேடியோ டிரான்ஸ்பான்டர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த அரிசி கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
தீவிர கண்காணிப்பு
சாப்டூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனபகுதிக்கு வரும் அரிசி கொம்பன் யானை எந்த இடத்திற்கு வருகிறது. எந்த வழியாக வருகிறது. என்பதை கண்காணிக்க சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்வமணி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள், வனச்சரக அலுவலர்கள் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதிகளுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி வருகிறது. அழகர் கோவில் பீட்பகுதியில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக உள்ளன. மேலும் அரிசி கொம்பன் யானை இக்கூட்டத்தில் நுழைந்தால் யானைகளுக்குள் மோதல் ஏற்படுமா ?என்பது குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.வனப்பகுதியில் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அப்படி இருந்தும் மீன் வெட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பது வாடிக்கையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.