டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு
கந்தம்பட்டியில் டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு போனது.
சூரமங்கலம்
சேலம் கந்தம்பட்டி மேம்பால நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 50). இவர் மேட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி ஊட்டிக்கு சென்று விட்டார், இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் குழந்தைகள் கந்தம்பட்டி கிழக்கு காலனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சந்திரசேகரன் ஊட்டியில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் (61) என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.17 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து சந்திரசேகரன், சேதுராமன் கொடுத்த புகார்களின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.