கடலூரில் போர்வெல் குழாய் விற்பனை கடை தகர ஷீட்டை உடைத்து பணம் திருட்டு

கடலூரில் போர்வெல் குழாய் விற்பனை கடையின் தகர ஷீட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-06 20:00 GMT

கடலூர் செம்மண்டலம் நண்பர்கள் நகரை சேர்ந்தவர் பாலகுரு (வயது 63). இவர் கடலூர் இம்பீரியல் சாலையில் போர்வெல் குழாய் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் குழாய்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த அவர், வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை மூடி விட்டு சென்றார். நேற்று காலை 10 மணி அளவில் வந்து கடையை திறந்த போது, கடையில் உள்ள மேஜையில் இருந்த கல்லா பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கே அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. உடனே கடையின் பின்புறம் சென்று பார்த்தார். அங்கே தகர சீட் உடைத்து வளைக்கப்பட்டு இருந்தது. இதனால் யாரோ மர்ம நபர் கடையின் பின்பக்க தகர சீட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.

முன்னதாக தகர சீட்டை உடைத்து உள்ளே வந்த திருடனுக்கு உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது. அங்கு ஒரு கழிவறை இருந்தது. உடனேஅந்த கழிவறை பூட்டையும் உடைத்து, அதன்பிறகு தான் கடைக்குள் வந்து அந்த பணத்தை திருடிச்சென்று விட்டது தெரிந்தது.

இதேபோல் அந்த கடைக்கு அருகில் இருந்த பர்னிச்சர் கடை மேற்கூரை தகர ஷீட்டையும் உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து, திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் அங்குள்ள இரும்பு கதவை திறக்க முடியாததால் திரும்பி சென்றதும் தெரிய வந்தது. இது பற்றி கடை உரிமையாளர்கள், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்