மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் பணம்-செல்போன் திருட்டு

மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் பணம்-செல்போன் திருட்டு போனது.

Update: 2023-05-22 20:31 GMT

சமயபுரம்:

திருப்பூர் மாவட்டம், ஆண்டிப்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி இந்திரா (50). இவர், தனது தங்கை சரளாவின் மகன் ப்ரீத்தம் (வயது 13) என்பவருக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை செய்வதாக வேண்டி இருந்தார். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நேற்று காலை திருப்பூரில் இருந்து பஸ்சில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சமயபுரம் செல்லும் பஸ்சில் ஏறி சமயபுரம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர், கோவிலுக்கு நடந்து சென்றபோது தான் கொண்டு வந்த கைப்பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,300 பணம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால், தன் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்று பதறிய அவர் இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு போலீஸ்காரர் ஒருவரின் செல்போன் மூலமாக இந்திரா தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து இணையவழி மூலமாக சமயபுரம் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் போனுக்கு ரூ.500 பணம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து கோவிலில் முடிகாணிக்கை செய்து அம்மனை வணங்கிய பிறகு, இந்திரா தனது தங்கை மகன் பிரீத்தமுடன் திருப்பூருக்கு சென்றார்.

இதுகுறித்து, அங்கிருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், தினமும் இதுபோன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை, பணம், செல்போன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்