3 கொள்முதல் நிலையங்களில் ராகி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்-தர்மபுரி கலெக்டர் சாந்தி தகவல்

Update: 2023-02-10 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 3 கொள்முதல் இடங்களில் ராகி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராகி கொள்முதல் நிலையங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வினியோகம் செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் மாதாந்திர தேவை 440 டன் என்றும், இதற்காக ராகி சிறுதானியத்தை சிறுகுறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யப்படும்

தர்மபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

சிறு குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற உரிய சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றின் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டு வரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்து, கொண்டு வர வேண்டும்.

அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 578 சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்படும். நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும்.

புகார் தெரிவிக்கலாம்

தமிழ்நாடு அரசின் இந்த அரிய வாய்ப்பை ராகி சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெற்றால், அது குறித்து மண்டல மேலாளருக்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்