சென்னையில் சில இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை

சென்னையில் சில இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.

Update: 2023-06-11 23:14 GMT

சென்னை,

கோடை காலம் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் சென்னையில் வெப்பம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 104 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதனால் பகலில் வெப்ப சூட்டால் வீடுகளில் சென்னை வாசிகள் அவதியுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இடையில் ஓரிரு நாட்கள் சென்னையில் மழை தலையை காட்டினாலும், பெரிய அளவுக்கு பெய்யவில்லை.

சென்னையில் நேற்று மாலை வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு மேல் கருமேக கூட்டங்கள் சூழ்ந்து, 7.50 மணிக்கு மேல் சாரல் மழை தொடங்கி, பின்னர் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் நனைந்தபடி சென்றனர்.

சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கோயம்பேடு, பட்டினப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட சில இடங்களிலும், புறநகர் பகுதிகளான மூலக்கடை, மாதவரம், புழல், செங்குன்றம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர் உள்பட சில இடங்களிலும் மழை பெய்தது. இதனால் வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்