பொன்மலைப்பட்டி, ஜூலை.10-
67-வது ெரயில்வே வார விழாவை முன்னிட்டு நேற்று பொன்மலை டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் ரெயில்வே துறை சம்பந்தப்பட்ட அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் ரெயில் மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியினை பொன்மலை பனிமனை முதன்மை மேலாளர் ஷியாம தார்ராம் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெயில்வே ஆணைய முன்னாள் மெக்கானிக் பிரிவு உறுப்பினர் தாசாரதி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார். புல்லட் ரெயில் பகுதியினை பொன்மலை பனிமனை முன்னாள் உதவி மேலாளர் வைகுண்ட மூர்த்தி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் 2ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உலகின் பல்வேறு நாட்டின் அஞ்சல் தலைகள், நாணயங்கள், பழமையான ஹெரிடேஜ் மாதிரி ரெயில்வே என்ஜின்கள், ரெயில்வே பாடல்கள், ரெயில்வே சம்பந்தமான புத்தகங்கள், ரெயில் விபத்து பேரிடர் மேலாண்மை மாதிரி வடிவமைப்பு, உலகின் பல்வேறு மாதிரி கோச்சுகள், வேகன்கள், டீசல் என்ஜின்கள், மின்சார ரெயில்கள், புல்லட் ரெயில்கள், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த ரெயில்வே டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அவிநாசி ஜலால் காட்சிப்படுத்தி விளக்கினார்.
கண்காட்சியில், சாரண-சாரணியர் தலைவர் முருகானந்தம், பென்சனர் சங்க தலைவர் கணேஷ், மற்றும் சாரண, சாரணியர்கள், பழைய கலைப் பொருள் ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.