அரசு பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல்
ஊசூர் அரசு பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைமைப்பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்களிடையே தேர்தல் நடத்தப்பட்டு அமைச்சரவை அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி தேர்தலில் பங்கு பெற விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் நடப்பது போல் மாணவர் வேட்பாளர்கள் தங்களுக்குரிய சின்னங்களை காண்பித்து வாக்குகளை சேகரித்ததை தொடர்ந்து நேற்று தேர்தல் நடந்தது. இதில் 12 மாணவர்கள் போட்டியிட்டனர். கண் கண்ணாடி, ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, தொப்பி, சீப்பு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, பட்டதாரி ஆசிரியை ரமாதேவி, ஆசிரியர்கள் ரோஸ்லின், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.