நடமாடும் உணவுப் பொருள் பரிசோதனை வாகனம்

ராணிப்பேட்டையில் நடமாடும் உணவுப் பொருள் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-22 13:02 GMT

அப்போது அவர் கூறியதாவது:-

இலவச பரிசோதனை

பொதுமக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரத்தினை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த நடமாடும் உணவு பொருள் பரிசோதனை வாகனம் வருகிற 26-ந் தேதி வரை செல்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை சந்திப்பு, நாளை (புதன்கிழமை) வாலாஜா ஒன்றியம் காவல் குடியிருப்பு பகுதி, 25-ந் தேதி (வியாழக்கிழமை) ஆற்காடு தாஜ்புரா, 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அரக்கோணம் நகராட்சி பழனிபேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் www.foodsafety.tn.gov.in என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதளம்

இந்த இணையதளத்தில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள், பதிவு மற்றும் உரிமத்திற்கு விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், உணவின் தரம் தொடர்பான புகார் வசதிகள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011 போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய, 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண் செயல்படுத்தப்படுகிறது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக தற்போது இணையதளம் (foodsafety.tn.gov.in) மற்றும் செல்போன் செயலி (TN foodsafety consumer App) அறிமுகபடுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன் ரீடர் அணுகல் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்