அவினாசி அருகே எம்.எல்.ஏ. கார் உள்பட 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து...!
அவினாசி அருகே எம்.எல்.ஏ. கார் உள்பட 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது.;
திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று மாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடியது. நாய் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டி சென்றவர் திடீரென பிரேக் போட்டார்.
இதனால் அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் முன்னால் சென்ற கார் மீது மோதியது. 2 கார்களும் அடுத்தடுத்து மோதிய வேகத்தில் அதற்கு பின்னால் 3-வதாக வந்த பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம்.ஆனந்தனின் காரும் எதிர்பாராதவிதமாக மோதியது.
3 கார்களும் அடுத்தடுத்து மோதி நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 கார்களின் முன்பகுதியும், பின்பகுதியும் லேசாக சேதமடைந்தது. கார்களில் பயணம் செய்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.