கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
அம்பராம்பாளையம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
அம்பராம்பாளையம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீண்ட காலமாக அம்பராம்பாளையம் ஆற்றில், ஆனைமலையில் இருந்து வரும் கழிவுநீரை கலந்து விடுகின்றனர். இதன் மூலம் சுத்தமான குடிநீரை பொள்ளாச்சி மக்களுக்கு அரசால் வழங்க முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆனைமலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அது முடியவில்லை என்றால் ஆழியாறு அணையில் இருந்து நேரடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வசதியாக ஏணி அமைத்து தர வேண்டும். பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
விபத்துகள் அதிகரிப்பு
பொள்ளாச்சி விஜயபுரம் அறிவொளி நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், வாகனங்கள் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதுதான். மேலும் இரவு நேரங்களில் அங்கு மின்விளக்கு இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுவும் விபத்து ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தி வாகனங்களை கண்காணிக்க வேண்டும். இது தவிர ஒளிரும் ஸ்டிக்கர்களை ஆங்காங்கே ஒட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.