செஞ்சி அருகே மினி குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு கிராம மக்கள் அதிர்ச்சி

செஞ்சி அருகே மினி குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-06 14:34 GMT

செஞ்சி, 

மினி குடிநீர் தொட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கம்பந்தூர் பஸ் நிலையம் அருகில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இதில் குடிநீர் பிடிப்பதற்காக இன்று காலை அதேஊரை சேர்ந்த சேகர்(வயது 55) என்பவர் வந்தார். அங்கு குழாயை திறந்து குடத்தில் குடிநீர் பிடித்தபோது, பயிர்களுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்து(விஷம்) நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர் குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தை பார்த்தபோது, பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது. இதனால் பதறிய அவர், இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார்.

குடிநீர் பிடிக்க தடை

அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் முருகபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கிராம மக்கள் குடிநீரை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே தகவல் அறிந்ததும் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர், மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் துரியோதனன், சுகாதார ஆய்வாளர் பாபு, செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விஷம் கலக்கப்பட்டது உறுதி

மேலும் குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் குடிநீரில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் மினி குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்திருப்பதும், குடிநீரை யாரும் பயன்படுத்தாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்ததும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்த மர்மநபா்கள் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்