திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம் - வலிப்பு நோயை காரணம் காட்டி கணவர் பிரிந்ததால் புதுப்பெண் தற்கொலை

வலிப்பு நோயை காரணம் காட்டி கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-04-03 20:43 GMT


வலிப்பு நோயை காரணம் காட்டி கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேர்ந்து வாழ மறுப்பு

மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அருணாதேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மனைவிக்கு வலிப்பு நோய் இருப்பதை காரணம் காட்டி அருண்குமார் தகராறு செய்தார். மேலும் தன்னால் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறினார். இதனால் அருணாதேவி தனது பெற்றோருடன் சென்று விட்டார்.

திருமணமான ஒரு மாதத்தில் வலிப்பு நோயை காரணம் காட்டி கணவர் பிரிந்து சென்றதால் அருணாதேவி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

தற்கொலை

சம்பவத்தன்று பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் அருணாதேவி மட்டும் தனியாக இருந்தார். மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து திருப்பாலை போலீசார் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அருணாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்