பள்ளிகளில் காலை உணவு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் 16-ந் தேதி அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தொடங்கிவைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் 16-ந் தேதி அமைச்சர்கள் தொடங்கிவைக்கிறார்கள்.
சென்னை,
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு (1,545 பள்ளிகள், 1.14 லட்சம் மாணவர்கள்) முதற்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.
மறுநாளில்...
அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 16-ந் தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.
16-ந் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட கலெக்டரால் தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகள்) ஏதாவது ஒரு பள்ளியை தேர்வு செய்து, அங்கு அமைச்சர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு திட்டத்தை தொடங்க வேண்டும்.
முன்னுரிமை
திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி. கரூர் மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்தும், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை பொறுத்தவரை ஊரக அல்லது மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்தும்,
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள பள்ளியை தேர்வு செய்தும் மாவட்ட அளவிலான திட்ட தொடக்க விழாவை 16-ந் தேதியன்று நடத்த வேண்டும்.
கண்காணிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் எஞ்சியுள்ள ஊரக, மலைப்பகுதி, நகராட்சி அல்லது மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசாணையின்படி அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 16-ந் தேதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை கொண்டு திட்டத்தை தொடங்க வேண்டும்.
இத்திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொண்டு, செம்மையாக செயல்படுத்த ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் உதவி இயக்குநர் நிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
அரசின் வழிமுறைகளை பின்பற்றி முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி செம்மையாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.