மண்டைக்காடு தேவசம் பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு ;இணை ஆணையர், ஆசிரியர்களை கண்டித்ததால் பரபரப்பு

மண்டைக்காடு தேவசம் பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது இணை ஆணையர், ஆசிரியர்களை அவர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-06 18:20 GMT

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு தேவசம் பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது இணை ஆணையர், ஆசிரியர்களை அவர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்தார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் கோவில் திருப்பணிக்காக தேவசம் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் மரப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விவரத்தை கேட்டதுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

இணை ஆணையரை கண்டித்தார்

இதையடுத்து மாணவர்கள் விளையாடும் கைப்பந்து மைதானத்தை பார்வையிட்டார். ஆனால் அதில் வலை அமைக்கவில்லை. இதனை கண்ட அமைச்சர் சேகர்பாபு, மைதானத்தில் வலை அமைக்காதது ஏன்? என ேகட்டு இணை ஆணையர் ஞானசேகரை கண்டித்தார்.

பின்னர் ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்டார். அதற்கு அவர்கள் 170 மாணவர்கள் உள்ளதாக தெரிவித்தனர். உடனே அமைச்சர் சேகர்பாபு, "ஆசிரியர்கள், தேவசம் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பள்ளி வளர்ச்சிக்கு பணிபுரிய வேண்டும். பள்ளிக்கு தேவையானவற்றை செய்து தர அரசு தயாராக உள்ளது. மாணவர் சேர்க்கையை 400 ஆக அதிகரிக்க செய்ய வேண்டும்.

இம்மாத இறுதிக்குள் மீண்டும் நான் இங்கு வருவேன். அப்போது இங்குள்ள குறைபாடுகளை சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருப்பணிகள் 4 மாதத்தில் நிறைவடையும்" என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்த ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திருநெல்வேலி மண்டல தேவசம் இணை ஆணையர் கவிதா பிரியாதர்ஷினி, உதவி ஆணையர் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பத்மநாபபுரம் தேவசம் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் முன்சிறை மகாதேவர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் அம்சி நடராஜன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் சதீஷ், முன்சிறை மகாதேவர் கோவில் சிவ பக்தர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது கோவிலில் செய்யப்பட வேண்டி இருக்கும் பராமரிப்பு பணிகள் குறித்து அமைச்சரிடம் சந்திரசேகர் எடுத்து கூறினார். பின்னர் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்