கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி நகராட்சி விளாந்தாங்கல் சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தை நேற்று முன்தினம் சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், 172 வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பயனுள்ளதாக இருக்கிறதா என அமைச்சர் கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் தங்களது குடியிருப்புக்கு அருகாமையிலே உள்ளதாகவும், சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்வதற்கு பயனாக உள்ளது என கூறினர். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் இருந்தனர்.