நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2022-08-26 17:31 GMT

நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

விலையில்லா சைக்கிள்

நத்தத்தில் உள்ள துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோசுகுறிச்சி, செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 1,362 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நத்தம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நத்தத்தில் மின் மயானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

முன்னதாக நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட கல்வேலிபட்டியில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

கோபால்பட்டி

இதேபோல் கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, செங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த விழாக்களில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நசாருதீன், நத்தம் நகர தி.மு.க. செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன் (தெற்கு), மோகன் (வடக்கு), நத்தம் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார் (தெற்கு), பழனிசாமி (வடக்கு), நத்தம் பேரூர் செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் முத்துகுமாரசாமி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்