கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.;

Update:2023-09-27 10:30 IST

சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்தும், வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து நெரிசலின்றி பஸ்கள் செல்வதற்காக அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமைய உள்ள ஆம்னி பஸ் நிறுத்த பணிகளையும், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை பணி, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்தார்.

சீரான மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் வடசென்னையை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மருத்துவம், கல்வி, பொது சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடு, வாழ்கை தர மேம்பாடு, வடிகால் வசதி, குடிநீர் வழங்கல், சாலைகள் மற்றும் பிற பொது கட்டமைப்புகளில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய தேவையான திட்டங்களை அடையாளம் காணும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

சென்னையில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளுடன் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் துரிதமாக செயல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்