அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் கடந்த 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், "சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் பணத்தை கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் மூலம் தான் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் இணையக்கூடாது? என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்த பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும்.
வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதை ஏற்க முடியாது. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை திருத்த முடியாது. செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. அவர், எங்கும் தப்பித்து செல்ல மாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கிறோம்" என்று கூறினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்துள்ளது. இந்த முறைகேடு இடைத்தரகர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை.
செந்தில்பாலாஜி இன்னும் அமைச்சராக உள்ளார். அவர் சக்தி வாய்ந்த நபராக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலையை ஒரு காரணமாக கூற முடியாது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 2½ ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களும் உள்ளனர். அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.