தமிழ்நாடு என்பதை கவர்னர் ரவி பயன்படுத்த தொடங்கியுள்ளார்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

தமிழ்நாடு என்பதை கவர்னர் ரவி பயன்படுத்த தொடங்கியுள்ளார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

Update: 2023-01-17 08:38 GMT

விழுப்புரம்,

விழுப்புரத்தில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இனத்திற்கும் பல்வேறு சோதனைகள் வந்து கொண்டிருந்தாலும் அதை கடந்து பல சாதனைகளை பெற்று வருகிறது தமிழ்மொழி.

பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு என பெயர் சூட்டினார். அதன்பிறகு அரசுத்துறை கோப்புகள், ஆணைகள் என அனைத்தும் தமிழ்நாடு என மாற்றப்பட்டு தமிழக கவர்னர்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நடைமுறைகளை கேட்டறிந்து தற்போதுள்ள கவர்னர் ரவியும் தமிழ்நாடு என்பதை பயன்படுத்த தொடங்கியுள்ளார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், கொள்கையிலும், லட்சியத்திலும் அடித்தட்டு மக்கள் வாழ்வில் ஏற்றம் காண தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் தமிழ்மொழிக்கும், தமிழ்மொழியின் தனித்தன்மைக்கும் உழைத்து பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. கண்ணியம் குறித்து பேசும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதலில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். தான், கண்ணியமாக இருக்கிறோமா என்பதை அவர் உணர வேண்டும்.

சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவர்களுடைய கொள்கைகளின் அடிப்படையில் அவரவர் நடந்து கொள்கின்றனர். ஒருபோதும் தி.மு.க. அவர்களை தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை.பா.ம.க. நிறுவனர் ராமதாசை பொறுத்தவரையில், தேர்தல் நேரத்தில் ஒரு கூட்டணியை முடிவு செய்வார். அதன் பிறகு தேர்தல் முடிவை பொறுத்து அவரது நிலைப்பாட்டை உடனே உறுதியாக தெரிவித்து செயல்படுவார். சிலவற்றை ஆதரிப்பார்கள், சிலவற்றை எதிர்ப்பார்கள், அது அவர்களது கட்சியின் நிலைப்பாடு, அதில் நாங்கள் தலையிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்