பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

Update: 2022-07-03 02:26 GMT

சென்னை:

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2-ம் நாளாக சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-

பழனி கோவில்களில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி குறித்தும், அதேபோல் ஏற்கனவே தொடங்கப்பட்ட அதிகமாக பக்தர்கள் வருகின்ற 10 கோவில்களுக்கு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 மருத்துவமனைகள் தொடங்குவது குறித்தும், நாள் முழுவதும் பிரசாதம் 5 கோவில்களிலே அறிவிக்கப்பட்டது.

உடனடியாக இத்திட்டத்தை தொடங்குவது குறித்தும், நடைபெற்று கொண்டிருக்கின்ற அன்னதானத் திட்டத்தில் புதிதாக 10 கோவில்களில் தொடங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு 2 கோவில்களில் முழு நேர அன்னதானத் திட்டத்தில் இருந்ததை தொடர்ந்து கூடுதலாக 3 கோவில்கள் என 5 கோவில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய 3 கோவில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நெல்லையப்பர் கோவில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை (இன்று) இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. 13 கோவில்களுக்கு பேட்டரி கார்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே பட்டீசுவரர் கோவில்களிலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், தொடங்கப்பட்டு இருக்கின்றது. மீதமுள்ள 11 கோவில்களில் அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பின்படி தொடங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்