சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் நடைபாதை வளாகம் - அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
24 மணி நேரமும் இயங்கும் நடைபாதை வளாகம் அமைப்பதற்கான பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை,
பெங்களூருவில் உள்ளது போன்று சென்னையிலும் வணிக வளாகம், பார், கடைகள் என 24 மணி நேரமும் இயங்கும் நடைபாதை தொடங்கப்பட உள்ளது. இதன்படி சென்னை தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ் கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், 19 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, இந்த சாலை அடுத்த 18 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். மேலும் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.