ஆதிதிராவிடர்நல மேல் நிலைப்பள்ளியில் அமைச்சர் காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் காந்தி ஆய்வுசெய்தார். அப்போது விடுதியில் உணவு தரத்தையும் பரிசோதனை செய்தார்.
ராணிப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் காந்தி ஆய்வுசெய்தார். அப்போது விடுதியில் உணவு தரத்தையும் பரிசோதனை செய்தார்.
அமைச்சர் ஆய்வு
ராணிப்பேட்டை நகராட்சி, காரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று திடீர் என்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி, பள்ளியில் தற்போது 6 முதல் 12-ம் ஆம் வகுப்பு வரை மொத்தம் 221 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு ஆசிரியர் தோற்றுவிக்கப்படவில்லை.
ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
அப்போது அமைச்சர் காந்தி, ஆதிராவிடர் நலத்துறை ஆணையரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆசிரியர் நியமனத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் பள்ளியில் தண்ணீரின் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் உத்தரவிட்டார். பள்ளியில் ஏற்படும் திருட்டை தடுக்க ரூ10,000 சொந்த பணத்தில் காவலர் ஒருவரை நியமித்திட உத்தரவிட்டார். அதற்கான சம்பளத்தை தானே தருவதாகவும் தெரிவித்தார்.
சுற்று சுவர் கட்ட தேவையான நிதியினை அரசிடம் கேட்டு பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளி, மாணவ, மாணவிகள் அமர சொந்த நிதியிலிருந்து 50 மேஜைகள் வாங்கித் தரப்படும் எனவும் தெரிவித்தார்.
பரிசோதனை
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியினை ஆய்வு செய்தார். இந்த விடுதியில் 39 மாணவிகள் தங்கி படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் சென்றபோது அங்கு மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
மாணவிகளிடம் உணவு தரத்தை கேட்டறிந்த அமைச்சர் உணவை தானே சாப்பிட்டு பார்த்து, உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் இளவரசி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செழியன், துணைத் தலைவர் பூங்காவனம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.