ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்பு
செம்பட்டி அருகே ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
செம்பட்டி அருகே ஜெய்னி நர்சிங் கல்லூரி வளாகத்தில் செயல்படும், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி விளக்கேற்றி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழகத்தின் சிறந்த கல்லூரியாக செயல்பட போகிறது. கேட்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் தொகுதிக்கு 2 கல்லூரிகளை வழங்கினார். இந்த கல்லூரியால் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள் சக்கரவர்த்தி மணிமாறன், கணேசன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர், கலெக்டர் ஆகியோர் வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களிடையே அமர்ந்து கவனித்தனர்.