தூத்துக்குடி விமான நிலையத்துக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்டவேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அரும்பணியாற்றினார்.

Update: 2024-02-03 10:46 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி விமான நிலையம் இயங்கி வருகிறது. தற்போது விமான நிலையம் பல நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்.

மிகவும் அரிதான திறமையுடையவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். இதழியல், கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் ஆன்மிகம் சார்ந்த துறைகளில் தனித்தன்மையுடன் விளங்கியவர். இந்தியாவின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் உள்பட 5 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது. தனது நேரடி முயற்சியால் 6 கல்லூரிகளை நிறுவி, சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிவகை செய்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.

புகழ்பெற்ற தென்காசி காசிவிசுவநாதர் கோவிலின் ராஜகோபுரத்தை, 178 அடி உயரத்துக்கு கட்டியமைத்து ஆன்மிக தொண்டாற்றியவர். அனைத்து பகுதி மக்களையும் சமமாக மதித்து நல்லிணக்கம் பேணி பாதுகாத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

இத்தகைய நற்குணங்களுடன் சிறந்து விளங்கிய, உலக புகழ் பெற்ற பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று அனைத்து பகுதி மக்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். எனவே, மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்