சிறார் திரைப்படத் திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறார் திரைப்படத் திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் :
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி பள்ளியில் நேற்று சிறார் திரைப்படத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறார் திரைப்பட திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சிறார் திரைப்பட விழா என்பது மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்தை பள்ளியில் ஒளிபரப்பி குழந்தைகளை பார்க்க வைப்பது மட்டுமல்ல. திரைப்படத்தின் மூலம் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை ஓர் மதிப்பீடு செய்து அவர்களை மேன்மைப்படுத்தும் நோக்கம் தான் இந்த திரைப்பட விழாவின் நோக்கம்.
இதன் மூலம் ஒரு திரைப்படத்தை பார்த்தால் குழந்தைகள் எப்படி படத்தை உணர்கிறார்கள்? மகிழ்ச்சியின் போது எப்படி இருக்கிறார்கள்? சோகத்தின் தாக்கம் என்ன? குதூகலம் என்ன? என்பதை பற்றி எல்லாம் ஓர் ஆய்வு தான் இந்த திரைப்பட விழா, இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவை என்ன என்பதனை நாம் அறிய உள்ளோம்.
மேலும் இந்த திரைப்படங்களின் மூலம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்ன உணர்ந்தார்கள் என்பதனை அவரது கருத்துக்களை கேட்க உள்ளோம். திரைப்படத்தை பார்த்து கதையை உணர்ந்து சிறந்த கருத்துக்களை கூறும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பவுள்ளோம்.
இவையெல்லாம் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக ஒரு கூடுதல் உற்சாகம்தான். எனவே இந்தத் திரைப்பட விழாக்கள் குழந்தைகள் தங்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்த விழாக்கள் நடக்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியாக பட்டீஸ்வரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்றார்.