சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்

அனைவரும் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த சிறுதானிய உணவு பெருவிழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

Update: 2023-03-17 18:16 GMT

அனைவரும் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த சிறுதானிய உணவு பெருவிழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

சிறுதானிய உணவு பெருவிழா

சிறுதானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர், வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன்தொடர்ச்சியாக திருப்பூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சீர்மிகு சிறுதானிய உணவு பெருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறுதானிய உணவுகள்

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு முக்கியம். அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். அதற்கு சிறுதானியம் ஊட்டச்சத்தை தரக்கூடிய வகையில் மிகுந்த சத்துள்ளதாக உள்ளது. சிறுதானியத்தை உற்பத்தி செய்கிற நானும் ஒரு விவசாயி மகன் தான்.

கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். இதை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியது. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதசத்து, நார்ச்சத்து மிகுந்தது. சிறுதானிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு குடும்பம் ஆரோக்கியமாக அமையும். அனைவரும் சிறுதானிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர் இல.பத்மநாபன், மருத்துவர் சிவராமன், கிட்ஸ் கிளப் தலைவர் மோகன் கார்த்திக், செயிண்ட் ஜோசப் கல்லூரி செயலாளர் குழந்தை தெரசா, முதல்வர் மேரிஜாஸ்பின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்