தேர்தலின் போது அறிவித்த 70 சதவீத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி

Update: 2023-01-03 18:45 GMT

பாலக்கோடு:

தேர்தலின் போது அறிவித்த 70 சதவீத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு விழா

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் ரூ.19 கோடியே 69 லட்சம் மதிப்பில் கால்வாய்கள், ஏரி மற்றும் அணைக்கட்டுகள் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.23 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்த போது தமிழகத்திற்கு காவிரி நீரைத் தரக்கூடாது என்று பேசியவர் தான் இப்போதைய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். அண்ணாமலைக்கு தலைவராக இருக்க தகுதி இல்லை. நாங்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

ஒகேனக்கல் குடிநீர்

தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு பாதிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சென்று நிதி உதவி பெற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக பாடுபட்டார். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் தர்மபுரிக்கு நேரில் வந்து தொடங்கி வைப்பார்.

70 சதவீத வாக்குறுதிகள்

தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மிரட்டல் பாணி அரசியலை செய்து வருகிறார். இது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டுவது, தொழில்அதிபர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார். அது இங்கே செல்லாது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் மணி, ராஜகுமாரி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், முனியப்பன், அன்பழகன், கிருஷ்ணன், பேரூர் செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர்கள் மனோகரன், முரளி, வெங்கடேசன், பாலக்கோடு ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்