தமிழக வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் கே.ராமச்சந்திரன் தகவல்

தமிழக வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2022-11-26 20:34 GMT

பவானிசாகர்

தமிழக வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ராமச்சந்திரன் கூறினார்.

பழங்குடியினர் அருங்காட்சியகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரையில் ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் வாழ்க்கையை விவரிக்கும் வகையிலான அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று அருங்காட்சியகத்தை தமிழக வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் இந்த திட்டங்கள் குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான (பொறுப்பு) ராமசுப்பிரமணியன் விளக்கினார். தொடர்ந்து பல்வேறு பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை தத்துவமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை அமைச்சர் பார்வையிட்டார்.

வனப்பகுதியை அதிகரிக்க திட்டம்

பின்னர் அமைச்சர் கே.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதன்முறையாக 7 வகை பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் அருங்காட்சியகம் பவானிசாகரில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடம் பவானிசாகர் அணை கட்டுவதற்காக 20 ஏக்கர் பரப்பளவை ஏற்கனவே பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பொதுப்பணித்துறையினர் மீண்டும் வனத்துறையினருக்கு இந்த இடத்தை ஒப்படைத்துள்ளனர். இதில் தற்போது 12 ஏக்கர் பரப்பளவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பணிகளை நிறைவு செய்ய இன்னும் ரூ.2 கோடி தேவைப்படும் என வனத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறி வரும் நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகையை ஒதுக்கி அருங்காட்சியக பணி முழுமையாக நிறைவு செய்யப்படும்.

ரூ.5 லட்சம்

தமிழக முழுவதும் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சம்பளத்தை ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தான் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு அவர்கள் 10 ஆண்டு நிறைவு செய்தால் பணி உயர்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ரூ.10 கோடி ஒதுக்கி இதுவரை அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு நிதி வழங்கப்பட்டுள்ளது.

யானை தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களிலும் அகழி வெட்டும் பணிக்காக வனத்துறை சார்பில் சொந்தமாக எந்திரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு குடிநீர் தேவைக்காக குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யவும் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வீடு கட்டி தர கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி வன எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் தற்போது தமிழகத்தில் 28.7 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது. இதை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 265 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ராமச்சந்திரன் கூறினார்.

பின்னர் நடந்த விழாவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவிக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். மேலும் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வன அலுவலகங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 2 ஜீப்புகளுக்கான‌ சாவியை அமைச்சர் வழங்கினார். பவானிசாகரில் இருந்து தெங்குமரஹடா செல்லும் வழியில் உள்ள நந்தி கிராமத்தை சேர்ந்த மக்கள், வீடு கட்டி தரக்கோரி கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்கள்

வரவேற்பு

முன்னதாக பவானிசாகர் பழங்குடியினர் அருங்காட்சியகத்துக்கு வந்த அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வரவேற்று அளிக்கப்பட்டது. மேலும் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் சால்வை அணிவித்தார்.

விழாவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ, கோணமூலை ஊராட்சித் தலைவர் குமரேசன், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.சி.வரதராஜ் மற்றும் வனச்சரகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்