தளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வாழ்வாதார சாலை திட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

தளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான வாழ்வாதார சாலை திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-07 16:23 GMT

தேன்கனிக்கோட்டை:

தளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான வாழ்வாதார சாலை திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

புதிய திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் இடைவெளி, உடல்நலம், சுகாதாரம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரத்தை குறிக்கோளாக கொண்டு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் 36 அரசு பள்ளிகளில் பள்ளிக்கு செல்லும் பாதை என்ற திட்டத்தை அசோக் லேலண்ட் தொடங்கியது.

இந்த திட்டம் திருவள்ளூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்பட்டு தற்போது 1,105 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரையுள்ள மாணவர்களை மையமாக கொண்டு உயர்கல்வி, தொழில் கல்வி, வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துதல், உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறமையை வளர்த்தல், டிஜிட்டல் திறன்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதல் குறித்து வாழ்வாதாரத்திற்கான சாலை என்ற புதிய திட்டத்தை அசோக் லேலண்ட் தொடங்கி உள்ளது.

36 ஆயிரம் மாணவ, மாணவிகள்

இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் திருவள்ளூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 133 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 படிக்கும் 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைவர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துணை இயக்குனர் நந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், மேயர் சத்யா, அசோக் லேலண்ட் சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்