ரெயில்வே கேட்டில் மினிலாரி மோதல்: சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
விருத்தாசலம் அருகே ரெயில்வே கேட்டில் மினிலாரி மோதியதால் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையம் அருகே நாச்சியார்பேட்டை- எருமனூர் சாலையை கடக்கும் வகையில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4.10 மணி அளவில் இந்த ரெயில்வே கேட் அருகே வந்த ஒரு மினிலாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே கேட்டில் மோதியது. இதில் ரெயில்வே கேட் சேதமடைந்து, சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதற்கிடையே மாலை 4.40 மணிக்கு குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ், சிக்னல் பிரச்சினையால் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அருகே மணிமுக்தாறு பாலத்தில் நடுவழியில் நின்றது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் விருத்தாசலம் ஜங்ஷன் ரெயில்வே நிலையம் முன்பு வயலூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நின்றது.
இதனால் அந்த ரெயில்களில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, ரெயில்வே கேட்டில் மோதிய மினி லாரியை அப்புறப்படுத்தி சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில்வே கேட் சீரமைக்கப்பட்டு, சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டதும், சுமார் 1½ மணி நேரம் தாமதமாக 2 ரெயில்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.