மலையடிவாரத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும்
பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மலையடிவாரத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
பழனி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சரவணன் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனிசாமி, வேளாண் உதவி இயக்குனர் கவுசிகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது, கள்ளிமந்தையம் அருகே சிப்காட் அமைக்க முயற்சி நடந்து வருவதாகவும், அதை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் கூறும்போது, விருப்பாட்சி, காப்பிளியப்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டா நிலத்தில் அரசு வரைமுறை இன்றி பல அடி ஆழத்தில் மண் அள்ளப்பட்டு வருகிறது.
கனிமவள கொள்ளை
மேலும் பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதியில் பல இடங்களில் மலையடிவார பகுதியில் குவாரி அமைத்து கனிமவளம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதுபற்றி வருவாய்த்துறை, போலீசில் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர். எனவே பழனி கோட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அதிகாரிகள் கூறும்போது, இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றனர்.
பின்னர் அமரபூண்டி பகுதியில் பல குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே வருவாய்த்துறையினர் அங்கு நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அப்போது தாசில்தார் தலைமையில் விரைவில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. பேசினார்.
ஆக்கிரமிப்பு
பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரம் மற்றும் இடும்பன்குளம் வாய்க்கால் பகுதியில் இறைச்சி கழிவுகளை கறிக்கடைக்காரர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்குள்ள விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதற்கு, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் உரிய ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கறிக்கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. தெரிவித்தார். அதேபோல் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.