சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு
கடத்தூரில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க திடல் அமைக்க மானியம் வழங்கும் வகையில் முகாம்
போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூரில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க திடல் அமைக்க மானியம் வழங்கும் வகையில் முகாம் நடைபெற்றது.
சிறுதானியங்கள்
விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகரிக்க வேளாண்மைத்துறை பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடத்தூரில் நடைபெற்ற பயிற்சியில் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி ஆரோக்கியமாக வாழ்வது குறித்து விளக்கினார்.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன், சாகுபடி முறைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, தினை, சாமை, வரகு, ராகி, குதிரைவாலி ஆகியவை பயிரிட பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ரக கம்பு
சான்று விதைகளுக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், உயிரியல் காரணிகள், செயல் விளக்கத் திடல்கள், விழிப்புணர்வு பயிற்சிகள் ஆகியவை வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடத்தூர் பகுதியில் அதிக மகசூல் தரக்கூடிய கோ10 கம்பு கொண்டு 2.5 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத் திடல் அமைக்கத் தேவையான விதை, நுண்ணூட்டம், உயிர் உரம், அங்கக உரம் போன்றவற்றுக்கு ரூ.6 ஆயிரம் மானிய உதவி வழங்கப்படுகிறது.இதன் மூலம் புதிய கம்பு ரகத்தை பரவலாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.