பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? - பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து

Update: 2022-11-06 18:45 GMT

கிருஷ்ணகிரி:

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-1960-ம் ஆண்டு காலக்கட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் அப்போது இருந்தது. அதன் பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பால் விலை உயர்வு ஓட்டல்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 50 ஆயிரம் லிட்டர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதம் உள்ள 25 ஆயிரம் லிட்டர் ஆவின் நிர்வாகம் மூலம் கொள்முதல் செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து பால் முகவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலையை சேர்ந்த பால் முகவர் குமரேசன்:-

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது மாடுகளை வளர்க்க கூடிய விவசாயிகளுக்கு தீவனப்புல் மற்றும் பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் பாலுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் தற்போது ரூ.3 லிட்டருக்கு உயர்த்தி அரசு அறிவித்து இருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது.

அதே நேரத்தில் நுகர்வோர்களுக்கு லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பால் உள்ளது. கொரோனா கால கட்டத்தில் கூட பால் அங்காடிகள் தொடர்ந்து இயங்கி வந்தன. எனவே பாலுக்கான விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.

டீ, காபி விலை உயர்வு

தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பிராங்கிளின்:-

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய பாலின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். டீயின் விலை ரூ.10 இருந்ததை கடைக்காரர்கள் ரூ.12 ஆகவும், காபியின் விலையை ரூ.12 இருந்ததை ரூ.15 ஆகவும் உயர்த்தி உள்ளனர். இந்த பால் விலை உயர்வால் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

லிட்டருக்கு ரூ.48 என இருப்பதை ரூ.50 ஆக உயர்த்தி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் லிட்டருக்கு 12 உயர்த்தப்பட்டுள்ளது ஏற்க முடியாது.

பரிசீலிக்க வேண்டும்

ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இல்லத்தரசி சுதா:-

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பால் உள்ளது. ஆவின் பாலின் விலையை அரசு உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது. பால் விலை உயர்வால் அது சார்ந்த அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும்.

அதே போல டீ, காபி உள்ளிட்டவைகளின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விலையை குறைக்க வேண்டும். லிட்டருக்கு ரூ.12 உயர்வால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பால் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு குறைந்த அளவில் (ரூ.3) உயர்த்தி விட்டு, பாலுக்கான விலையை உயர்த்தி அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு பாதிப்பை தருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு, இதன் தொடர்ச்சியாக பால் விலையை அரசு உயர்த்தி இருப்பது அதிர்ச்சி தருகிறது. இதை பரிசீலிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த டீக்கடை ஊழியர் சாம்ராஜ்:-

பால் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் அத்தியாவசிய பொருளாகும். வர்த்தக கியாஸ் விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பால் விலை உயர்வு மேலும் அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். பால் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு கூட பலரும் பால் வாங்கி செல்கிறார்கள். எனவே அத்தியாவசிய தேவையான பாலின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச அளவில் சத்தான உணவாக கருதப்படும் பாலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந் தேதி சர்வதேச பால் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் சர்வதேச பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளான நவம்பர் 26-ந் தேதி தேசிய பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்