தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியது ஏமாற்றம் அளிக்கிறது உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியது ஏமாற்றம் அளிக்கிறது உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
நாமக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி பால்வளத்துறையின் மாநில இணையத்தின் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஆனால் பாலுக்கான விற்பனை விலை குறித்தோ, கொள்முதல் விலை உயர்வால் ஆவினுக்கு ஏற்படும் ரூ.400 கோடி இழப்பிற்கு அரசு மானியம் வழங்குவது குறித்தோ எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்த விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எனவே அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் அறிவிக்காமல், அதிகாரி மூலம் அறிவித்து இருப்பதில் இருந்தே பால் உற்பத்தியாளர்கள் மீது எவ்வளவு அலட்சிய போக்குடன் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பது தெரிகிறது.
ஏற்கனவே ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததால், ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் விலை உயர்வாலும் ரூ.400 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படும். எனவே இவற்றை அரசு மானியமாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். போராட்டத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தினர்.
போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு, பால் உற்பத்தியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி உள்ளனர். எனவே பால் உற்பத்தியாளர்களின் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் தொடரும். தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பால் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் பெருமாள், மாநில பொருளாளர் முனுசாமி, உதவி செயலாளர்கள், ராமநாதன், மணி, மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.