நெல்லையில் நள்ளிரவில் பயங்கரம்; தந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்

நெல்லையில் நேற்று நள்ளிரவில் தந்தையை கழுத்தை அறுத்து மகன் கொலை செய்தார்.

Update: 2022-08-25 22:23 GMT

நெல்லையில் நேற்று நள்ளிரவில் தந்தையை கழுத்தை அறுத்து மகன் கொலை செய்தார்.

தனியார் விடுதி

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டனர்.

அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தை அறுத்துக் கொலை

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 46) என்பது தெரியவந்தது. இவருடைய மகன் மாரிச்செல்வம் (26). இவர் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆறுமுகம் அழைத்து வந்தார்.

இதையொட்டி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள விடுதியில் தந்தையும், மகனும் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் ஆறுமுகத்தின் கழுத்தை மாரிச்செல்வம் கத்தியால் அறுத்துக் கொலை செய்ததும், மேலும் அவரை சரமாரியாக குத்திக் கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்