வடக்கு நோக்கி நகரும் 'மிக்ஜம் புயல்'... படிப்படியாக குறையும் மழை...!

மிக்ஜம் புயல் காரணமாக இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது.

Update: 2023-12-05 01:31 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செ.மீ. மழை பெய்திருந்தது. அதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியது.

இந்நிலையில் சென்னையில் இருந்து படிப்படியாக வடக்கு நோக்கி நகரத் தொடங்கிய மிக்ஜம் புயல், தற்போது நெல்லூர் கடற்கரையை நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தரும் மேகங்கள் வடதமிழகத்தில் இருந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு நகர தொடங்கியுள்ளதால் வடதமிழகத்தில் படிப்படியாக மழையளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நெல்லூருக்கு 20 கி.மீ. கிழக்கு - வட கிழக்கே மையம் கொண்டுள்ள 'மிக்ஜம் புயல்' இன்று காலை 11.30 மணிக்குள் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்