மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-08-08 20:10 GMT

எடப்பாடி:-

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேட்டூர் அணை உபரிநீர், நீரூந்து நிலைய கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட 4 தொகுதி விவசாயிகள் பயன் அடையும் வகையில் இந்த பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், ரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை அறிவித்து அதற்கான பணியை நானே ெதாடங்கி வைத்தேன்.

தாமதப்படுத்தி வருகிறது

ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு 14 மாதங்கள் கடந்தும் இத்திட்டத்தை உரிய காலத்தில் செயல்படுத்த முடியாமல் தாமதப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த மெத்தன போக்கால், தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் அதிகப்படியான உபரிநீர் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் தேக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் முழுமூச்சாக இத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், தற்போது இப்பகுதியில் உள்ள 100 ஏரிகள் நிரப்பப்பட்டு இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். இந்த திட்டத்தை விரைந்து முடிக்க மனமில்லாமல் கடந்த ஆட்சியின் மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டும் செயலானது, இப்பகுதி விவசாயிகள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆன்லைன் சூதாட்டம்

இது தொடர்பாக சரபங்கா வடிநில பகுதி விவசாயிகள் என்னிடம் முறையிட்டு குறை கூறினர். இதேபோல் ஒகேனக்கல் பகுதியில் நடைபெறும் பணிகளும் தற்போது உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தி.மு.க. அரசு செயல்பட வேண்டும்.

அண்மையில் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருந்த நிலையில் மின்கட்டண உயர்வு, தமிழக மக்களை வெகுவாக பாதிக்கும். இது தவிர தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் சூதாட்டம், போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. அதை உடனடியாக கட்டுப்படுத்திட வேண்டும்.

மேலும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற போது கட்சி தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பு எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்