தோட்டக்கலை பயிர்களின் சேதத்தை குறைக்கும் வழிமுறைகள்; கலெக்டர் ஆகாஷ் விளக்கம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தோட்டக்கலை பயிர்களின் சேதத்தை குறைக்கும் வழிமுறைகள் குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 18:45 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தோட்டக்கலை பயிர்களின் சேதத்தை குறைக்கும் வழிமுறைகள் குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயிர்கள் சேதம்

தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற நிலை உள்ளதால் தோட்டக்கலை பயிர்களின் சேதத்தை குறைத்திட விவசாயிகள் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

பழப்பயிர்களில் அதிக சேதத்திற்கு உள்ளாகக்கூடிய வாழையில் காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வாழை மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைத்து கம்புகளை ஊன்றுகளாக பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் நல்ல வடிகால் வசதி அமைத்து தண்ணீர் தேங்காத அளவில் பராமரிக்க வேண்டும்.

பல்லாண்டு பழ மரங்களான மா, கொய்யா, எலுமிச்சை, வாழை போன்ற பயிர்களில் காய்ந்த நோய் தாக்கிய இலைகள் மற்றும் கிளைகளை அகற்றி கவாத்து செய்து போதிய காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

மருந்து தெளிப்பு

அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும். தக்காளி, கத்தரி, வெங்காயம், மிளகாய் மற்றும் கொடிவகை காய்கறி பயிர்களுக்கு வேர்ப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நல்ல வடிகால் வசதியினை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற பூஞ்சாண உயிரியல் கட்டுப்பாடு மருந்துகளை தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

பசுமைக்குடில், நிழல் வலை குடில்களின் அடிப்பாகம் நிலத்துடன் பலமாக இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை சரிசெய்து கொள்ள வேண்டும். மேலும் குடிநீர் வாயிற் பகுதி (கதவு) காற்று உட்புகாத வண்ணம் நன்றாக மூடி வைக்க வேண்டும்.

காப்பீடு

ராபி பருவத்தில் வாழை, வெங்காயம், மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதத்தை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் வருவாய்த்துறையுடன் கூட்டாய்வு செய்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்