அமெரிக்காவில் மீட்கப்பட்ட உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார்.

Update: 2022-06-17 20:06 GMT

அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார்.

கோவில் சிலைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் நேற்று மதுரையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் நரசிங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கங்காளநாதர், அதிகார நந்தி ஆகிய உலோக சிலைகள் 1985-ம் ஆண்டு கடத்தப்பட்டன. இந்த, சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று 1986-ம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 2 சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அந்த சிலையை யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நியூயார்க் அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்தவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. தமிழகத்தை சேர்ந்த உலோக சிலைகள் அதிக அளவில் லண்டனுக்கும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் கடத்தப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40 சிலைகள் எங்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மரகதலிங்கம் வழக்கு

மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் மாயமான மரகதலிங்கம் வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளது. அந்த லிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மீட்கப்பட்ட 10 சிலைகளில் 9 சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின் போது கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட சிலைகளை, கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்