கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நிதி நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-05-25 12:13 GMT

சென்னை கொளத்தூர் மக்காராம் தோட்டம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரி (வயது 28). இவர் கொளத்தூர் அடுத்த தாதன்குப்பம் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் நடத்திவரும் நிதிநிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் நிதி நிறுவன அதிபர் வடிவேலு மாரியின் கடைக்கு சென்று அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாரி நேற்று வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாவுக்கு முன்னர், செல்போனில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் தன்னுடைய தற்கொலைக்கு பைனான்சியர் வடிவேலு தான் காரணம் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நிதிநிறுவன அதிபர் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாரியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்