ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி

Update: 2023-07-31 11:39 GMT

காங்கயம்

காங்கயத்தில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் முறுக்கு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

முறுக்கு வியாபாரி

காங்கயம் நகரம், சிவசக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 44). இவர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் செந்தில்ராஜா நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் காங்கயம் - கோவை சாலை அகத்திலிங்கம்பாளையம் பிரிவு பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது காங்கயத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை கோவை கருவலூரை சேர்ந்த தங்கராஜ் (38) என்பவர் ஓட்டி வந்தார். கோவை சோமனூரை சேர்ந்த சிவகுமார் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் மோதி பலி

இந்த பஸ் எதிர்பாராதவிதமாக செந்தில்ராஜா சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில்ராஜாவுக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செந்தில்ராஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை சூலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில்ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் தங்கராஜ் மீது காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்