சிப்காட்- பிரிட்டிஷ் ஆணையரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழில்நுட்ப உதவி தொடர்பாக சிப்காட் மற்றும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

Update: 2022-10-11 00:14 GMT

சென்னை,

சிப்காட் நிறுவனத்திற்கும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவிற்கான தொலைநோக்கு பார்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு வசதிகளுக்கான வழி வகைகள் மற்றும் ஆளுமை கட்டமைப்புகள் போன்றவற்றை வரையறுப்பதற்கும் சிப்காட் நிறுவனத்திற்கு இது உதவும்.

மேலும், வெளிநாடுகளிலுள்ள இத்தகைய பூங்காக்களில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அதை சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் வகை செய்யும்.

அண்ணா பல்கலைக்கழகம்

அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒரகடம் மருத்துவ உபகரணங்கள் பூங்காவிற்கான சிறப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சிப்காட் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும், மருத்துவ தொழில்நுட்பத் துறையில் உள்ள உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்துவதோடு மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தயாரிப்புகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் தன் கிளை நிறுவனங்கள் மூலம் சிப்காட் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளுக்கு உதவும்.

சிப்காட் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் மருத்துவ தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும்.

தீயணைப்பு நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் கட்டப்பட்டுள்ள திட்ட மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இப்பூங்காவில் வாகன உதிரிபாகங்கள் மற்றும் துணை உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

105 தொழிற்சாலைகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு 84 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் உள்ள நிறுவனங்கள் ரூ.2,622 கோடி முதலீடு செய்து 11 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், இந்தநிகழ்ச்சியில் சிப்காட் நிறுவனத்தின் 2021-2022-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான ரூ.61.20 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு இணைப்பு

தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் 'ஏஜி அண்டு பி'பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 222 பகிர்மான நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணி 8 ஆண்டுகளில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

ராணிப்பேட்டையில்...

தற்போது 'ஏஜி அண்டு பி' பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிலையத்தை அமைத்துள்ளது. இந்த எரிவாயு நிலையம் ரூ.30 கோடி செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும் 30 ஆயிரம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு 'ஏஜி அண்டு பி' நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. இயற்கை எரிவாயு நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் 10-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்