சட்டமன்ற பேரவை குழுவுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம்
சட்டமன்ற பேரவை குழுவுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு நெல்லை மாவட்டத்தில் விரைவில் கூட உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்ட பகுதியில் வசிக்கும் நபர்கள், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கையெழுத்திட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சென்னை-600009 என்ற முகவரிக்கு வருகிற 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மனுக்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் புது பிரச்சினைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வருகிற 1-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.