ஈரோட்டில் உரிமை முழக்க மாநாடு: 'சாதாரண வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்'- ஏ.எம்.விக்கிரமராஜா பேச்சு

சாதாரண வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.

Update: 2023-05-05 22:22 GMT

சாதாரண வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.

வணிகர் உரிமை முழக்க மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் வணிகர் தின மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. வணிகர் தினமான நேற்று 40-வது மாநாடு "வணிகர் உரிமை முழக்க மாநாடு" என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல், செயலாளர் பொ.ராமசந்திரன் பொருளாளர் உதயம் பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மண்டல தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைத்தார். டெக்ஸ்வேலி தலைவர் பி.பெரியசாமி, எஸ்கேஎம் கால்நடை தீவன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகர், தொழில் அதிபர் வி.செந்தில்முருகன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர்.

பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்.

விருது

விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு வ.உ.சி. விருதையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வணிக செம்மல் விருதையும், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கல்வி ஊக்கத்தொகையும் வழங்கி பேசினர். இதில் வ.உ.சி. விருதை நாமக்கல் என்.வெள்ளையன், ஆர்.எம்.தேவராஜா, ஆர்.பரமேஸ்வரன், கே.ராஜகோபால் ஆகியோரும், வணிக செம்மல் விருதை ஏ.ஹரிகிருஷ்ணன், ஆர்.எஸ்.கணேசன், ஏ.துரைசாமி ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன.

மாநாட்டில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசும்போது கூறியதாவது:-

வாட்வரி நிலுவை வழக்குகள்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று வணிகர்கள் என்னிடம் கேட்டு உள்ளனர். சிறு, குறு வணிகர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கை ஏற்கப்படும் என்று உறுதியாக இருக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை வணிகர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வருவதை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும். வாட் வரி நிலுவை குறித்த வழக்குகளை சமாதான திட்டம் மூலமாக தீர்வு காண வேண்டும். இதில் ஒரு லட்சம் வணிகர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

எளிமையான முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்து இருக்கிறார். நமது அடிப்படை கோரிக்கைகளை அவர் நிறைவேற்றி கொடுத்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களால் சாதாரண வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.9-க்கு கொடுக்கிறார்கள். வணிகர்கள் ரூ.40-க்கு விற்பனை செய்து அதற்கான ஜி.எஸ்.டி.யை அரசுக்கு செலுத்துகிறார்கள். எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி வருகின்றன.

சிறப்பு சட்டம்

கலப்படம் இல்லாத பொருட்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை அமைச்சர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ஓட்டு கிடையாது. எங்களை போன்ற வணிகர்களுக்குதான் ஓட்டு இருக்கிறது. எனவே வணிகர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். சாதாரண வணிகர்களின் உரிமையை பாதுகாக்க சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 'செக்' வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் எம்எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், பிரபாகர்ராஜா, பேரமைப்பின் இளைஞா் அணி தலைவர் நெல்லை ராஜா, செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், பொருளாளர் சேகர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மாநாட்டில் நடந்த கண்காட்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சார்பில் சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டன. இதே போல் மாநாடு தொடங்குவதற்கு முன்பு பரதநாட்டியம், இன்னிசை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்