தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

Update: 2023-05-01 18:45 GMT

நாமக்கல்:

தொழிலாளர் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தையொட்டி வெண்ணந்தூர் வட்டாரத்துக்குட்பட்ட 24 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் கிராம ஊராட்சிகளின் வரவு, செலவு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சுத்தமான குடிநீர் வழங்கல், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம், சுகாதார வளாகத்தை பயன்படுத்துதல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி, பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், நெகிழி கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் நான் முதல்வன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறி, விவாதிக்கப்பட்டது.

நாச்சிப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை தாங்கினார். இதில் மகளிர் திட்ட மண்டல அலுவலர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், நாகலிங்கம் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மொளசி, அகரம்

தொழிலாளர் தினத்தையொட்டி மொளசியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில் மொளசி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் அருள்குகன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் பிரியா, ஊராட்சி செயலாளர் உமா, வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, கல்யாணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் கொத்தம்பாளையம் மாரியம்மன் கோவில் திடல் முன்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வியை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.

திருச்செங்கோடு மண்டகபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மன்ற தலைவர் சரண்யா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள், மண்டகபாளையம் ஊராட்சியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. சீரான குடிநீர் வழங்கப்படுவதில்லை. திட்டப்பணிகள் தரமற்று செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்துவதாக ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

பள்ளிபாளையத்தை அடுத்த ஆனங்கூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மன்ற தலைவர் சிங்காரவேலு தலைமையில் நடந்தது. ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துவது, கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருவது மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்துவது, சாக்கடை கால்வாய் அமைப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தொழிலாளர் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்