திராவிட மாடல் ஆட்சி நீடித்தால்தான் மத வெறியர்களால் ஆட்சிக்கு வர முடியாது- கி.வீரமணி
திராவிட மாடல் ஆட்சி நீடித்தால்தான் மத வெறியர்களால் ஆட்சிக்கு வர முடியாது என கி.வீரமணி கூறினார்.
திராவிட மாடல் ஆட்சி நீடித்தால் தான் மத வெறியர்களால் ஆட்சிக்கு வர முடியாது என கி.வீரமணி கூறினார்.
பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். செயலாளர் புபேஸ் குப்தா வரவேற்றார்.
கூட்டத்தில் திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ.செங்குட்டுவன், நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான், மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
சாதி எங்கே?
கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்தது. திராவிடர் கழகத்தினரும், கம்யூனிஸ்ட்டுகளும் தொடர்ந்து போராடி இரட்டை குவளை முறையை அகற்றினோம். ஆனால் டாஸ்மாக் கடையில் ஒற்றை குவளை முறை தான்.
மது பாருக்குள் போனதும் ஒருவரை ஒருவர் 'பிரதர்'னு ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அங்கு சாதி என்பது எங்கே சென்றது? நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை கிளாஸ் சாராயம் சாதிக்குது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா?
பெண்களுக்கு உரிமைத்தொகை
மகள் பிறந்தால் கவலைப்படாதீர்கள். உரிமைத்தொகை ரூ.1,000-ஐ அரசு வழங்கும். பெண்கள் படிக்க வேண்டும் என்றாலும் கவலைப்பட வேண்டாம். அரசு ரூ.1,000 வழங்கும். எத்தனை பெண்கள் பிறந்தாலும் ரூ.1,000-ஐ அரசு வழங்கும். திராவிட மாடல் ஆட்சியின் சாதனை களத்தில், சமுதாய புரட்சிதான் தலையாய புரட்சி.
அந்த சமுதாய புரட்சியை செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். இது வெறும் அரசியல் கூட்டணி இல்லை. கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி. சமுதாயத்தை மாற்றக்கூடிய கூட்டணி.
நீடிக்க வேண்டும்
அடுத்த தேர்தலை பற்றி கவலைப்படுவது முக்கியம். ஏனென்றால் மீண்டும் சனாதனவாதிகள், சாதி வெறியர்கள், மத வெறியர்கள் இந்த ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்கு சனாதனவாதிகளை முறியடித்து, சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய திராவிட மாடல் ஆட்சி நீடிக்க வேண்டும். அவ்வாறு நீடித்தால் தான் மத வெறியர்களால் ஆட்சிக்கு வர முடியாது. நமக்கும் விடியல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.