தர்மபுரி, அரூரில்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2023-02-04 18:45 GMT

தர்மபுரி மற்றும் அரூரில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் கீதாராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் தாலுகாகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தர்மபுரி கோட்ட பகுதி ஏரிகள், குளங்கள், குட்டைகளில் உள்ள நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. மொத்தம் 11 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தடுப்பணை திட்டம்

இதேபோல் அரூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வரட்டாறு அணையில் இருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்கசிவு ஏற்படாமல் சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னாக்கல் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்..

மானியம் கிடைக்க ஏற்பாடு

கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் பேசுகையில், நில மேம்பாடு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தரிசாக உள்ள நிலத்தை சாகுபடி செய்ய விரும்புபவர்கள் வேளாண் துறையை அணுகினால் மானியம் வழங்க கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தக்காளி மற்றும் கொய்யா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பண்ணை மூலம் நாற்றுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்